என்னைப் பார்க்க வருவதில் 90 சதவீதத்திற்கும் மேல் நான் மருந்து எழுதுமுன் கேட்கும் முதல் கேள்வி
சார் இதுல சைட் எஃபெக்ட் எதுவும் வராதே?
நவீன மருத்துவத்தில் மிகப்பெரிய பூச்சாண்டி உண்டு என்றால் அது பக்கவிளைவுகள்தான். சைட் எஃபெக்ட் என்ற வார்த்தையே பலருக்கு ஆழ்ந்த பயம் தரும் வார்த்தையாக உள்ளது மருந்துகளையும் அதன் விளைவுகளையும் பற்றிய புரிதல் இல்லாததால் பலரும் அவர்களுக்கு பயன் தரும் மருந்துகளை எடுக்கவேண்டிய காலத்திற்கு முன்னதாகவே நிறுத்தி விடுகின்றனர். பிரச்சனை தீவிரமடைந்து தேவையற்ற சிகிச்சைகளும் செலவுகளும் அதிகரிக்கின்றன.
பக்கவிளைவுகள் என்பது நிஜமாகவே இந்தளவுக்கு பயப்பட வேண்டியவையா? அதைப் பற்றி பேசுவதை இன்றைய மனதுடன் இன்றுவின் நோக்கம்.
முதலில் பக்க விளைவு என்றால் என்ன என்று பார்ப்போம்.
எந்த ஒரு பொருளையும் நாம் உட்கொண்டால் அதன் நோக்கம் எதுவோ அதில்லாமல் ஏற்படும் விளைவே பக்க விளைவு. இது எல்லாவற்றுக்கும் பொருந்தும். பூண்டு சாப்பிடுகிறீர்கள், கபசுர குடிநீர் குடிக்கிறீர்கள் வயிற்று புண் வருகிறது இவையும் பக்கவிளைவுகளே.
பக்கவிளைவுகளை பொதுவாக இரண்டாக பிரிக்கலாம்.
- தெரிந்த பக்க விளைவுகள்
- எதிர்பாராத தனித்துவமான பக்க விளைவுகள்
முதல்வகை விளைவுகள் மருந்தின் உற்பத்தி காலத்திலேயே நமக்கு தெரிந்துவிடும்.
மருந்தை உற்பத்தி செய்வது என்பது பல்வேறு நிலைகளை தாண்டி வருவது.
நிலை 0 – மிருகங்கள் மீது செய்யும் பரிசோதனை (Preclinical Trial)
நிலை 1 – நல்ல உடல் நலனுடன் இருப்பவர்கள் மீது செய்யப்படும் சோதனை
நிலை 2 – அந்த வியாதி உள்ளவர்களுக்கு கொடுத்து நடத்தப்படும் பரிசோதனை
நிலை 3 – அந்த வியாதி உள்ள பலருக்கு பல்வேறு இடங்களில் நடத்தப்படும் சோதனை (Multicentric Stage 3 Trials)
இதன் பின்னரே மருந்து விற்பனைக்கு வரும்.
நிலை 4 – மருந்து மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்த பின் வரும் விளைவுகளை பற்றிய ஆய்வு.
இந்த நிலைகளில் எது ஒன்றிலும் மனிதர்களின் உயிருக்கு கெடுதல் வருமென்று தெரிந்தால் உடனடியாக அனுமதி மறுக்கப்படும். அது இல்லாமல் ஏற்படும் மற்ற விளைவுகள் எல்லாமே பதிவு செய்யப்படும் பரிசோதனை காலத்தில் நிகழும் வியாதிகள் எதுவும் மருந்தினால் நடந்ததாகவே கருதப்படும். இவை எல்லாமே மருந்திற்கு அப்ரூவல் வாங்கும் முன் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மருந்திற்கு அப்ரூவல் கொடுத்த பின் இதை மருந்தைப் பற்றிய கையேட்டில் வெளியிட வேண்டும். FDA Insert / Patient Information Sheet (PIS) எனப்படும் இவை எல்லாம் மருந்துக்கும் இணையத்தில் கிடைக்கும்.
இவற்றில் மருந்துகளின் பக்க விளைவுகளை குறிப்பிடும்போது பின்வரும் வகையில் குறிப்பிடுவார்கள்
Most Common – மிகவும் சாதாரணமான பக்க விளைவுகள் – >10%
Common – சாதாரணமான பக்க விளைவுகள் – 1-10%
Uncommon – அசாதாரணமான பக்க விளைவுகள் – 0.1- 1%
Rare – அபூர்வமான பக்க விளைவுகள் – less than 0.1%
Very Rare – மிக அபூர்வமான பக்க விளைவுகள் – less than 0.01%
யோசித்துப் பாருங்கள்… 90 சதவிகிதம் ஒரு விஷயம் நடக்கவில்லை என்றால் நாம் அதை நடக்காது என்றேக் கொள்வோம். ஆனால் மருந்தின் பக்க விளைவுகள் பொருத்தவரை 90% அது நடக்கவில்லை என்றாலும் அதை சாதாரணமாக நடக்கக் கூடிய பக்க விளைவுகள் என்று கூறுகிறோம். இதன் அர்த்தம் என்ன நீங்கள் மருந்து எடுத்துக் கொண்டால் நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் எந்த பக்கவிளைவும் நடப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனாலும் அது நவீன மருத்துவத்திற்கு பத்தாது.
பக்க விளைவுகள் என்பது நிகழ்ந்தாலும் அது மருந்து எடுத்துக் கொள்ளும் அனைவருக்கும் நிகழ்வதில்லை.
இதில் இன்னொரு விஷயமும் கவனிக்கவேண்டும். இதில் குறிப்பிட்டுள்ள அனைத்து பக்கவிளைவுகளும் மருத்துவரால் கண்காணிக்கப்படும். அவற்றின் முதல் அறிகுறியிலேயே தேவைப்பட்டால் அதை மாற்றுவதற்கு முடியும்.
அடுத்தது தனிப்பட்ட நோயாளிகளுக்கு ஏற்படும் எதிர்பாராத தனித்துவமான விளைவுகள். இது அலர்ஜி காரணமாக ஏற்படலாம் இவற்றைக் கணிக்க முடியாது யோசித்துப் பார்த்தால் இது எல்லா பொருட்களிலும் ஏற்பட வாய்ப்புண்டு. நீங்கள் உங்கள் வீட்டில் சாப்பிடும் காய்கறிகளில் இருந்து கூட அலர்ஜி ஏற்படலாம் இதுபோன்ற அறிகுறிகள் வந்தால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவர்களை அணுகினால் சரி செய்ய முடியும்.
ஆனால் சில சமயம் நாம் சொல்லும் அறிகுறிகள் மருந்தினால் இல்லை என்று மருத்துவர் கூறுவார். ஆனால் நமக்கோ மருந்து எடுத்ததற்கு பின்னரே இதெல்லாம் நடந்தது என்று தோன்றும். எதனால் இவ்வாறான அறிகுறிகள் வருகின்றன?
அடுத்த பகுதியில் பேசுவோம்
