கவுன்சலிங் – உண்மையில் என்ன…

பலருக்கு மனநோய்க்கான வைத்தியம் என்றாலே அது கவுன்சலிங் தான். ஆனால் அதை ஒரு சர்வரோக நிவாரணிப் போல ஒரு கருத்தும் உள்ளது. அது சரியா? உண்மையில் கவுன்சலிங் என்ன செய்யும்? இந்த பதிவில் பார்ப்போம்….

தமிழர்களின் அகராதியில் மனநல வைத்தியம் என்பதற்கு கவுன்சலிங் என்று எங்கும் இருக்கிறதா என்று தெரியவில்லை. எங்கள் பிரிவுக்கு வரும்போது  “கொஞ்ச நாளா ஒரு மாரி இருக்கான் சார்… கொஞ்சம் கவுன்சலிங் கொடுப்பீங்கன்னு கூடி வந்தோம்” என்று சொல்பவர்கள் நூற்றுக்கு தொண்ணூறு பேர் இருப்பார்கள். கவுன்சலிங் என்றால் என்னவென்று படித்தவர்களுக்கே சரியான தெளிவில்லாமல் இருப்பதால் கவுன்சலிங் கொடுக்கிறேன் பேர்வழி என்று மக்களை ஏமாற்றி காசுப்பிடுங்கும் கூட்டத்துக்கு வசதியாக போய்விட்டது. இந்த பதிவில் கவுன்சலிங் என்ற சிகிச்சை முறையின் பயன், பயனின்மை பற்றி சற்றே விரிவாக முடிந்தளவுக்கு எளிதாக சொல்கிறேன்.

மன நோய்களுக்கு சிகிச்சை என்பதே சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருவானதுதான். அதற்கு முன் மாட்டு மந்தைகளை போல மனநலம் பாதிக்கப்பட்டவர்களை காப்பகங்களில் அடைத்து வைக்க மட்டுமே முடிந்திருந்தது. அந்த சூழ்நிலையில்தான் சிக்மண்ட் பிராய்ட் தோன்றினார். அது வரை புரிந்துக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்த மனதின் இயக்கத்தை புரிந்துக்கொள்ளவும் அதற்கு விஞ்ஞான சாத்தியமுள்ள விளக்கமொன்றை தந்ததால் பலர் அவரை பின்பற்றத்தொடங்கினார்கள். 1930கள் வாக்கில் அவர் புகழ் உச்சத்தில் இருந்தது. கிட்டத்தட்ட மன நல மருத்துவ உலகின் MGR என்றே அவரை சொல்ல வேண்டும். ஆனால் அந்த சமயத்தில்எதிர்க்கவே முடியாதென்றிருந்த அவரின் கருத்துகளுக்கு எதிர்ப்புகள் கிளம்ப ஆரம்பித்தது.  காரணம் ப்ராய்ட் மனிதனின் முயற்சிகளுக்கு ஊக்கம் தருவது செக்ஸ் மட்டுமே என்று கருதினார்.  மனிதர்கள் இயல்பாகவே அழிவு உணர்ச்சிகளை மட்டுமே கொண்டவர்கள் என்ற ப்ராய்டின் கருத்தை பல விஞ்ஞானிகள் ஏற்கவில்லை. இது  மனித மனதை அதன் ஆயிரமாயிரம் உணர்ச்சிகளை  குறுகிய பார்வையுடன் ஆராய்வது என்று கருதினார்கள். ப்ராய்டின் சிகிச்சை முறைக்கு மாற்றாக புது வழி முறைகளை உருவாக்க தொடங்கினர். அவற்றில் கவுன்சலிங் என்ற இந்த வழிமுறையும் ஒன்று.

இதன் அடிப்படை சித்தாந்தம் எந்த ஒரு மனிதனும் தன் வாழ்கையை நல்ல திசையில் கொண்டு செல்லவே எண்ணுகிறான்.ஆனால் சூழ்நிலைகள் காரணமாக தவறான முடிவெடுக்கிறான். அந்த தவறுகளின் விளைவாக பிரச்சனைகள் தோன்றும்போது அவனுக்கு அவன் பிரச்சனைகளை எதிர்க்கொள்ளவும் புரிந்துக்கொள்ளவும் ஒரு துணை தேவைப்படுகிறது.  So ஒரு நல்ல கவுன்சலரின் வேலை அவனுக்கு அவன் எடுக்கும் முடிவுகளின் தவறுகளை சுட்டிக்காட்டி அதை எடுக்க தூண்டிய காரணிகளை ஆராய்ந்து தெளிவான முடிவெடுக்க உதவுவதுதான். 

கவுன்சலிங் – உண்மையில் என்ன…

கவுன்சலிங் என்ற வார்த்தைக்கு ஒவ்வொருவரும் ஒரு அர்த்தம் கொடுத்து கொள்கின்றார்கள். ஆனால் அனைவரும் புரிந்து கொண்ட ஒரே விஷயம் – கவுன்சலிங் ஒரு பேச்சு வைத்தியம் (TALK THERAPY). இதை ஏன் சொல்கிறேன் என்றால் மருத்துவராயில்லாத சிலர் கவுன்சலிங் தருகிறேன் என்று கிளினிக் ஆரம்பித்து விட்டு மனநல மருந்துகளை எழுதிக்கொடுக்கின்றனர்.  மருந்துகளின் செயல்பாடறியாத இவர்கள் எழுதி தரும் மருந்துகளை சாப்பிட்டால் உடலுக்கு கேடு வருவதுதான் மிச்சம். அதனால்தான் சொல்கிறேன் நீங்கள் Consult செய்பவர் மனநல மருத்துவர் (PSYCHIATRIST)  அல்லாத பட்சத்தில் கவுன்சலிங் பேர்வழிகள் எழுதி தரும் மருந்துகளை சாப்பிடாதீர்கள்…

சரி விஷயத்துக்கு வருவோம்… கவுன்சலிங் என்பது பேச்சு வைத்தியம் என்று சொன்னேன்… அதில் என்னதான் செய்ய வேண்டும்…

வேற என்ன… பேசத்தான் வேணும்!!!….

அடப்போய்யா… அதுக்கேதுக்கு கூட்டிட்டு வரணும்… அதான் வீட்லயே நாங்க நிறையா அட்வைஸ் பண்ணிட்டோமே என்று சொல்லும் முன் பொறுங்கள்… 

அட்வைஸ் என்பது வேறு… கவுன்சலிங் வேறு…

கவுன்சலிங் செய்வதின் அடிப்படையே நம்பிக்கைதான்… “நீயும் என்னை போல் ஒரு மனிதன்… ஒரு சூழ்நிலை காரணமாக உனக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனையை சமாளிக்க உன்னால் முடியவில்லை… அதனால் நீ குறைச்சல்… நான் உன்னை விட உசத்தி.. எனக்கு உன்னை விட அதிகம் தெரியும் என்று நான் நினைக்கவில்லை… உன்னால் உன் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்று நம்புகிறேன்… அந்த நம்பிக்கையோடே உன்னை பார்க்கிறேன்…” என்று அணுகுவதே சரியான கவுன்சலிங்… அதாவது நம்மை அணுகுபவர்களுக்காக முடிவுகளை நாம் எடுக்காமல் அவர்கள் எடுக்க உதவி செய்வதே கவுன்சலிங்… முடிவை நாம் எடுத்தால் அது அட்வைஸ்…

உதாரணமாக… ஒரு கான்சர் நோயாளியிடம் “தோ.. பாரு… ஏற்கனவே சிகரெட் பிடிச்சு பிடிச்சு நுரையீரல் பாதிச்சுருச்சு… இனியும் குடிச்சா செத்துத்தான் போகணும்… ஒழுங்கா இப்போவே நிறுத்திடு….” என்றால் அது  அட்வைஸ்…. மாறாக அவனுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை விளக்கி எது அவனை சிகரெட் பிடிக்க தூண்டுகிறதுதென்று அவன் உணருமாறு செய்து அந்த பழக்கத்தை கைவிட்டால் கிடைக்கும் நன்மைகளை உணர செய்து அதன் பின்னும் முடிவெடுக்கும் பொறுப்பை அவனுக்கே விட்டால் அது கவுன்சலிங்….

இதை படிக்கும்போதே உங்களுக்கு தோன்றியிருக்கும்… இப்படியெல்லாம் யார் செய்ய முடியுமென்று… So that brings us to the next question….

 யார் கவுன்சலிங் கொடுக்கலாம்??

அடிப்படை கல்வி தகுதியும், Active listening என்ற தகுதியும், உதவ வேண்டும் என்ற ஆர்வமும்  உள்ள யார் வேண்டுமானாலும் நல்ல கவுன்சலர் ஆகலாம். ஆனால் இதை ஒரு தொழிலாக செய்ய வேண்டுமென்றால் Psychology graduate அல்லது Doctorate  முடித்தவர்களோ Psychiatric Social workerகளோ அல்லது இதற்கென்று certificate courses  உள்ளன – அதை முடித்தவர்களோதான்  நிஜமாகவே கவுன்சலர்களாக பணியாற்ற முடியும். அடுத்த முறை இது போன்று கவுன்சலிங் கொடுப்பவர்கள் யாரையும் அணுகினால் அவர்களின் கல்வித்தகுதியை தெரிந்துக்கொண்டு அணுகுங்கள். எந்த துறையை விடவும் இதில் போலிகள் அதிகம். No counselling is better than wrong counselling. 

சரி.. படித்தால் மட்டும் ஒருவர் நல்ல கவுன்சலிங் தந்து விட முடியுமா… நல்ல கவுன்சலரின் தகுதிதான் என்ன????

பல சமயம் நமக்கு வரும் பிரச்சினைகளின் அடிப்படைகள் நமக்கு புரியாது. நம்மை நாமே நியாயப்படுத்திக்கொண்டு, நமக்கேதும் பிரச்சினையில்லை என்றும் சந்தர்ப்பம் சூழ்நிலை என்றும் நம்மையே ஏமாற்றிக்கொண்டிருப்போம். நம்முடைய இந்த சுய நியாயப்படுத்துதலை  (Self Justification) தவிர்த்து, நம்முடைய நிஜமான தவறுகளை அடையாளம் கண்டு சொல்வதே நல்ல கவுன்சலர்களின் வேலை. இது  எல்லோராலும் முடியாது. தவறான ஆலோசனைகளால் நேர விரயமும் மன குழப்பங்களும் தான் மிஞ்சும். ஆகவே உண்மையிலே நல்ல கவுன்சலர்களை அடையாளம் காண்பது என்பது சிகிச்சையின் அடிப்படை தேவைகளில் ஒன்று. கீழ்க்கண்ட விஷயங்களை ஒரு வழிகாட்டியாக கொள்ளலாம்…

1. உங்கள் பிரச்சனைகளை,உணர்வுகளை காது கொடுத்து கேட்கவேண்டும்.  இதற்கு Active Listening என்பார்கள்… அதாவது நீங்கள் உங்கள் பிரச்சினையை சொல்லி கொண்டிருக்க அவர் மதியம் சாப்பிட போகும் கோழி கறியை பற்றி யோசித்துக்கொண்டிருக்க கூடாது… உங்களை முழுமையாக உங்கள் மனதிலிருப்பதை பேச விட வேண்டும். எப்போடா gap கிடைக்கும் என்று காத்திருப்பது போல் இடையே பாயக்கூடாது… அவசியப்பட்டால் உங்கள் பிரச்சினைகளை அவர் புரிந்து கொண்டவற்றை உங்களிடம் சொல்ல வேண்டும்… உங்கள் பிரச்சினைகளை முழுமையாக அறியும் முன் நீ இப்படித்தான் இருப்பாய் என்று முடிவுக்கு வருவதோ  உங்களை  உங்கள் தவறுகளை சுட்டிக்காட்டி நீ செய்தது தவறு என்று பழிப்பதோ கூடாது. இரவினில் வரும் டிவி சேனல் லேகிய வைத்தியர்கள்  இந்த ஜாதி… 

2. ஒரு நல்ல கவுன்சலர் கண்டிப்பாக உங்களிடம் ஆலோசனையை தவிர மற்றவற்றை தர மாட்டார். என் புத்தகம் வாங்கு என் DVD வாங்கு உன் பிரச்சனை சரி ஆகிடும் என்று சொல்பவரை கண்டால் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்…..

3. ஒரு நல்ல கவுன்சலர் கண்டிப்பாக மன நல பிரச்சினைகளைப் பற்றிய அடிப்படை அறிவுடன் இருக்க வேண்டும். அவசியம் நேரிட்டால் உங்களை மன நல சிகிச்சைக்குப் பரிந்துரைக்க வேண்டும். As early as possible… மருந்து சாப்பிட்டால் நீ ஒழிஞ்ச!!!… என்று சொல்லி சரியான சிகிச்சை கிடைக்க தாமதிக்க கூடாது. 

4. உங்கள் கேள்விகளுக்கு தெளிவான பதில் சொல்ல வேண்டும். உங்களை கேள்வி கேட்க ஊக்குவிக்க வேண்டும். நீ எப்படி என்கிட்டே கேள்வி கேக்கலாம் என்று கோபப்பட கூடாது. 

5. உங்களைப்பற்றிய விவரங்களை உங்களிடம் கேட்காமல் வேறு யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள கூடாது.

6. நீங்கள் Second Opinion வாங்க விரும்பினால் கண்டிப்பாக மறுக்க கூடாது.

இவை எல்லாம் ஒரு நல்ல கவுன்சலரிடம் நீங்கள் எதிர்ப்பார்க்க கூடிய அடிப்படை விஷயங்கள். சரி நல்ல கவுன்சலர் கிடைத்து விட்டார் எல்லா பிரச்சினையும் தீர்ந்து விடுமா… என்றால் அது பிரச்சினையை பொறுத்து. அப்படியென்றால் எந்தெந்தப் பிரச்சினைக்கு கவுன்சலிங் தரலாம்…

கவுன்சலிங் – எதற்கு உதவும்…

மனதை பாதிக்கும்  பிரச்சினைகள் எல்லாமே வியாதிகள் இல்லை. அவற்றுள் பல சாதாரண மனித வாழ்க்கை அனுபவங்கள். ஆனால் அதை எதிர் நோக்க முடியாதவர்களிடம் மனப்பாதிப்பை உண்டு செய்கின்றது. இது போன்ற உளவியல் பிரச்சனைகளுக்கு பல சமயங்களில் மன நல மருந்துகள் அவசியப்படாது. இவற்றுக்கு உளவியல் சிகிச்சை முறைகளே தேவைப்படும்.

உளவியல் சிகிச்சைகள் (Psychological Therapies அல்லது Psychotherapies) எனப்படுபவை வெவ்வேறு கோட்பாடுகளில் உருவானவை. இவற்றுக்கு ஒரு அடிப்படை கோட்பாடு இருக்கும்… இப்படித்தான் மேற்கொள்ள வேண்டும் என்ற வழிமுறைகள் இருக்கும்… நாம் பொதுவாக கவுன்சலிங் எடுத்துக்கோ என்று சொல்லும் போது இதுப்போன்ற உளவியல் சிகிச்சை முறைகளையே குறிப்பிடுகிறோம். கவுன்சலிங் என்பது ஒரு வகையான உளவியல் சிகிச்சை முறை மட்டுமே.

உண்மையில் கவுன்சலிங் என்பது ஒரு ஆலோசனை வழங்கலுக்கு மட்டுமே. இது உங்களுக்கு ஒரு முடிவெடுக்க உதவும். உங்கள் பிரச்சினைகளை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க உதவும். ஆனால் பிரச்சினையை தீர்க்குமா என்றால் தீர்க்காது. உதாரணமாக விபத்தில் கால் முறிந்தவர்களுக்கு மாவுக்கட்டு போட்டு ஒரு ஊன்றுகோலும் தருவார்கள். அவரின் கால் குணமடைய உதவுவது அந்த கட்டா… இல்லை அவரின் கையில் உள்ள ஊன்றுகோலா… கவுன்சலிங்கும் அப்படி ஒரு ஊன்றுகோல்தான்.

அந்தந்த பிரச்சினைகளை பொறுத்தே கவுன்சலிங் அமைய வேண்டும். அதை எல்லாவற்றையும் குணப்படுத்தும் சர்வரோக நிவாரணியாக கருதக்கூடாது. நான் ஏற்கனவே கூறியிருந்ததை போல் எவ்வாறு மன நல மருந்துகள் உளவியல் பிரச்சனைக்கு அவசியமில்லையோ அதே போல் உளவியல் வைத்தியங்களும் மனோவியாதிகளை முழுமையாக தீர்க்காது. ஏனென்றால் மன வியாதிகள் உருவாவது மூளையின் ரசாயனக் கோளாறுகளால். So எது மனோ வியாதி எது உளவியல் பிரச்சினை என்று எப்படி இனம் பிரிப்பது?… நல்ல கவுன்சலர்கள் தாராளமாய் இதை கண்டுப்பிடித்து விடுவார்கள். ஆனால் ஒரு வேளை இதை இனம் காண முடியாத அல்லது இனம் கண்டும் உங்களை தேவையான நல்ல சிகிச்சை பரிந்துரைக்க விரும்பாத போலிகளாய் இருந்தால் அங்கே கவுன்சலிங் உதவாது. அதற்காகத்தான் இந்த பதிவின் ஆரம்பத்தில் நல்ல கவுன்சலர்களின் தகுதிகளை குறிப்பிட்டிருந்தேன். When in doubt, உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு விட்டு அணுகுங்கள்.

இறுதியாக எந்த சிகிச்சை முறை என்றாலும் அதன் வெற்றியை தீர்மானிப்பது ஒன்றுதான் – COMMITMENT – குணப்படுத்த வேண்டும் என்று டாக்டருக்கும் குணமாக வேண்டுமென்று நோயாளிக்கும். தீர்வு என்னவென்று டாக்டர் சொன்னாலும் அதை பின்பற்ற போவது நோயாளிதான். ஆகவே இது போன்ற மனநல சிகிச்சை முறைகளில் பயன் பெறுபவரின் பங்களிப்பும் மிக மிக முக்கியம். நம் மக்களிடையே தென்படும் easy & quick fix மனப்பான்மை இதற்கு உதவாது. இதை புரிந்துக்கொண்டு உங்கள் மனநல மருத்துவரை அணுகுங்கள். சீக்கிரம் நலம் பெறுவீர்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *