டாக்டர்களில் பலருக்கு இந்த அனுபவம் உண்டு. ஏதாவது தொந்திரவுக்கு ஒரு ஊசி போட்டிருப்போம் அல்லது மாத்திரை தந்திருப்போம். அடுத்த நாள் உடனே ஒரு சம்பந்தமில்லாத அறிகுறியுடன் திரும்பி வருவார்கள். உதாரணமாக…
“ஒரே கண்ணை கட்டிக்கிட்டு வருது…”
“மொய மொயன்னு வருது…”
“பக்ன்னு அடைச்ச மாதிரி இருக்கு…”
பல சமயங்களில் மருத்துவ புத்தகங்களிலேயே கண்டுபிடிக்க முடியாத வகைகளில் கூட இந்த அறிகுறிகள் இருக்கும். மனநல துறையில் இது போன்ற Complaints மிகவும் சாதாரணம்.
இதற்கு என்ன டெஸ்ட் செய்தாலும் அதில் நார்மல் என்று வரும் இது போன்ற விளைவுகள் எதனால் ஏற்படுகின்றன
பதில் மிகவும் எளிது…
நம்பிக்கை…
மருந்துகள் வேலை செய்வது என்பதில் நம் நம்பிக்கை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு மருந்தை எடுத்துக்கொள்ளும் அதைப்பற்றிய நம் எண்ணங்கள் மிக முக்கியமானவை இந்த மருந்து நமக்கு உதவும் என்ற எண்ணம் இருந்தால் அல்லது இதை முயற்சித்துப் பார்க்கலாம் என்று அளவாவது யோசித்திருந்தால் அந்த மருந்து எந்த ஒரு விளைவையும் ஏற்படுத்தாது
மாறாக மருந்தை எடுக்க விருப்பம் இல்லாமலோ அல்லது வேறு வழியில்லாமல் அதை எடுக்கும்போது நாம் அதை ஒரு பதற்றத்துடனேயே அணுகுகிறோம் அதனால் மருந்து எடுத்தவுடன் நாம் நம் உடலை மிகவும் கவனிக்க ஆரம்பிக்கின்றோம்.
நம் உடலில் பல்வேறு சமயங்களில் பல்வேறு அறிகுறிகள் ஏற்படும் சில சமயம் முதுகு வலிக்கும் சில சமயம் கழுத்து வலிக்கும் சில சமயம் வயிற்றை இழுத்துப் பிடிக்கும். சில சமயம் நெஞ்சு பிடிப்பது போல் இருக்கும். இவையெல்லாம் அறிகுறிகள் மட்டும் தான்.
அறிகுறிகள் வியாதி ஆகாது.
நல்ல மனநிலையில் இருக்கும் போது இந்த அறிகுறிகளை நாம் கண்டு கொள்ள மாட்டோம்…உதாசீனப்படுத்தி விடுவோம். ஆனால் மருந்து எடுத்த பின் இந்த அறிகுறிகள் உடலில் நிகழ ஆரம்பித்தால், உடனடியாக அதை மிகவும் கவனம் கொண்டு கண்காணிக்கின்றோம். உடனே நான் பதட்டமடைய ஆரம்பிக்கின்றோம் அதனால் மேலும் இது போல அறிகுறிகள் உருவாக ஆரம்பிக்கின்றன. இன்னும் பதட்டம் அடைகிறோம். இந்த சுழற்சி, ஒன்று நம்மை மருந்தை நிறுத்தி வைக்கிறது அல்லது மீண்டும் மருத்துவரிடம் கொண்டுபோய் நிறுத்துகிறது.
ஆங்கிலத்தில் இதற்கு NOCEBO EFFECT என்பார்கள்.
இதற்கு என்ன செய்வது?
முதலும் முக்கியமான விஷயம், ஒரு மருத்துவ முறையின் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் எடுத்தவுடன் அதை முயற்சிக்காதீர்கள். ஆனால் ஏன் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற கேள்வி கேளுங்கள் அது உங்கள் பயத்தினால் என்றால் அந்த பயத்திற்கு என்ன காரணம் என்று யோசியுங்கள். பயத்தினால் ஒரு காரியத்தை செய்யாமல் இருக்கலாமா என்று உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.
ஒரு மருந்து பற்றிய – அதன் பக்கவிளைவுகள் பற்றிய – பயம்தான் உள்ளது என்றால், உங்கள் மருத்துவரிடம் அதைப் பற்றி விளக்கம் கேட்டு தெளியுங்கள். ஆனால் பல சமயம் நாம் முடிவெடுப்பது மருத்துவரின் விளக்கத்தை வைத்து அல்ல நமக்குத் தெரிந்த நம் நண்பர்கள் அல்லது உறவினர்கள் ஆகியோரின் பேச்சை வைத்துதான். இதற்கு நான் எப்பொழுதும் சொல்லும் பதில் ஒரு ஃபேன் மூடவில்லை என்றால் ஒரு வாட்டர் பைப் வேலை செய்யவில்லை என்றால் பற்றி தெரிந்த ஒரு எலக்ட்ரீசியனையோ அல்லது ஒரு பிளம்பரையோ கூப்பிடுகிறோமே ஒழிய ஒரு காய்கறி விற்கும் பாட்டியையோ அல்லது பேப்பர் போடும் பையனையோ கூப்பிடுவது இல்லை. ஒரு ஜடப் பொருளுக்கு கூட அதைப்பற்றி தெரிந்த ஒரு டெக்னிஷியன் ஒப்பீனியன் தேவைப்படும்போது, அதை விட ஆயிரம் மடங்கு காம்ப்ளெக்ஸான நம் உடல் பற்றி சந்தேகம் எழுந்தால், அதை தீர்க்க மட்டும் மருத்துவரை தவிர ஏன் எல்லோருடைய கருத்துக்களும் வேதவாக்காக இருக்கிறது?
இறுதியாக வைத்தியம் என்பது ஒரு கூட்டு முயற்சி. மருத்துவர் மற்றும் நோயாளி களுக்கு நடுவே ஒரு புரிதலும் பிணைப்பும் இருந்தாலே பிரச்சினைகளை எளிதில் தீர்க்க முடியும். இதை நீங்கள் புரிந்து கொண்டால் இந்த கட்டுரையின் நோக்கம் நிறைவேறும்.
