நல் தூக்க வழிமுறைகள்

தூக்கத்திற்கும் மனநல மருத்துவதிற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. மனநல மருத்துவர்களை நாடுபவர்கள் பலசமயம் தூக்கமின்மை என்ற நிலை வரும்போதே வருகின்றனர். மருந்துகள் எடுத்து தூக்கம் சரியாக விட்டால் அடுத்த நிமிடம் மருந்துகளை நிறுத்தி விடுகின்றனர். ஆக மொத்தத்தில் அவர்களை பொருத்தவரை மனநலம் என்பது தூக்கம் என்று அர்த்தம் கொள்கின்றனர். இது மிகவும் தவறான பார்வை.

தூக்கம் மனநலப் பிரச்சினைகளின் அறிகுறிகளில் ஒன்று. ஆனால் அது மட்டுமே மனநலப் பிரச்சனை ஆகாது தூக்கமின்மை என்பதால் வியாதிகள் வருவதில்லை வியாதி வந்ததற்குப் பின் தூக்கமின்மை வருகிறது. அதேபோல் பிரச்சினை சரியாகுவதின் முதல் அறிகுறியே தூக்கம் சரியாகுவது.

இதன் மற்றொரு பக்கத்தில் வேறு சிலர் இருக்கின்றனர். இவர்களுக்கு தூக்கம் என்பது மாத்திரை இல்லாமல் வராது என்ற நம்பிக்கை உண்டு. இவர்கள் மனநல மருத்துவர்களை சந்தித்து எப்போதோ மாத்திரை எடுத்துக் கொள்கின்றனர். அதன் பின் அவர்களே மருத்துவர் ஆலோசனையின்றி தூக்க மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக்கொள்கின்றனர். இதன் விளைவாக ஒரு கட்டத்தில் மாத்திரை போட்டும் தூக்கம் வரவில்லை என்ற நிலையில் மருத்துவரை அணுகுகிறார்கள். இதுவும் மிகவும் தவறான போக்கு.

உண்மையில் மனநல மருந்துகளில் தூக்கம் வருவது என்பது மிகச்சில மருந்துகளுக்கு மட்டுமே அதுவும் சில காலத்தில் உடம்பிற்கு பழகிப் போய்விடும் ஆகையால் தூக்கத்திற்கு என்று தனியாக மருந்து சாப்பிடுவது வீண். என்றுமே நாம் மனதில் கொள்ள வேண்டியது வள்ளுவனின் வாக்கு

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் 

வாய்நாடி வாய்ப்பச் செயல்

நோய் என்னவென்று அறிகுறிகளைக் கொண்டு கணித்து நோயின் காரணம் என்ன என்பதை அறிந்து அதை சரி செய்யும் வைத்தியம் என்ன என்று உணர்ந்து அதைக் தருபவனே உண்மையான வைத்தியன்.

உண்மையில் தூக்கமின்மை என்பதற்கு மருந்துகள் மட்டும் தான் ஒரே தீர்வா  என்றால் இல்லை என்பதே பதில். மருந்துகளை எடுப்பதைவிட மிக முக்கியமானது நாம் கடைபிடிக்க வேண்டிய நல் தூக்க வழிமுறைகள் .

நல் தூக்க வழிமுறைகள் என்பவை தூக்கத்திற்காக  நாம் மேற்கொள்ள வேண்டிய சில நடவடிக்கைகள்.  இவற்றுக்கு உளவியல் ரீதியான அடிப்படையும் உண்டு. 

  1. நாம் தூங்கி எழும் நேரம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் தூங்கும் நேரத்தை விட எழும் நேரம் மாறாமல்  ஒரே நேரமாக இருப்பது மிகவும் முக்கியம்.  அப்படி இருந்தால் நமக்கு அந்த குறிப்பிட்ட நேரம் வரும்போது தானாக தூக்கம் வர ஆரம்பித்துவிடும்
  1. பகல் தூக்கம் தவிர்க்க வேண்டும். மனிதர்களுக்கு தூக்கம் ஆரம்பிப்பதற்கு இருவகையான விஷயங்கள் தூண்டுகோலாக உள்ளன.  ஒன்று பகல்  இரவாகுவது. இரண்டு  நாள் முழுவதும் தூங்காமல் இருப்பதன் மூலம் உருவாகும் அலுப்பு இவை இரண்டுமே ஆரம்பிப்பதற்கு மிகவும் முக்கியம் யோசித்துப் பாருங்கள் நீங்கள் பகலில் தூங்கிய நாட்களில் கண்டிப்பாக இரவு தூக்கம் வர நேரமெடுத்திருக்கும்.
  1. படுக்கை தூக்கத்திற்கு மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். படுக்கையில் உட்கார்ந்து சாப்பிடுவது விளையாடுவது டிவி பார்ப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.  காரணம் என்னவென்றால் உளவியல் ரீதியாக நாம் ஒரு இடத்தில் ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்யும் போது அந்த வேலையுடன் அந்த இடமும் ஒரு அங்கமாகிவிடும். அங்கே சென்றாலே அந்த வேலைதான் ஞாபகம் வரும். இதற்கு Conditioning என்று பெயர்.  அப்படி என்றால் படுக்கை என்றாலே தூக்கம்தான் வரும்.
  1. படுக்கையில் படுத்து இருபது நிமிடத்திற்கு மேல் உங்களுக்கு தூக்கம் வரவில்லை என்றார் படுத்துக் கொண்டே இருக்கக்கூடாது படுக்கையின் அருகே ஒரு சிறிய நாற்காலி போட்டுக்கொள்ளுங்கள். உங்களுக்கு சுவாரஸ்யமே இல்லாத ஒரு விஷயத்தில் ஈடுபடுங்கள்., உதாரணமாக டிக்சனரி படிப்பது
  1. படுப்பதற்கு முன் வழக்கமாக ஏதாவது ஒரு பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். அது பாட்டு கேட்பதாக இருக்கலாம், அல்லது புத்தகம் படிப்பதாக இருக்கலாம், அல்லது குடும்பத்தாருடன் பேசிக் கொண்டிருப்பதாக இருக்கலாம்.
  1.  படுப்பதற்கு அரைமணி நேரம் முன் எலக்ட்ரானிக் சாதனங்களை தவிருங்கள்.  படுக்கும் இடத்தை வசதியாக வைத்துக் கொள்ளுங்கள்.  படுப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்  தண்ணீர் குடிப்பது நிறுத்திவிடுங்கள். படுக்கும் முன் உங்கள் இயற்கை உபாதைகளை கழித்துவிடுங்கள். 
  1. டீ, காபி இரவு வேளைகளில் சாப்பிடுவதை தவிர்க்கவும். பகலிலுமே  அவற்றில் ஒரு கட்டுப்பாடு இருப்பது அவசியம்
  1. மது அருந்துவது தூக்கம் வரவழைப்பது போல் தோன்றலாம் ஆனால் அதன் பின்விளைவாக அடுத்த நாள் பதட்டம் அதிகரிக்கும் அதுவே தூக்கத்தை கெடுக்கும் ஆகவே மது அருந்துவதைத் தவிர்க்கவும்.
  1. இரவு அதிகம் உணவு உட்கொள்ள வேண்டாம் சாப்பிட்ட பின் குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் கழித்து தூங்குவது நல்லது ஒருவேளை இடையில் பசித்தால் பழம் அல்லது பருப்பு வகைகள் போன்ற உணவு வகைகளை   உட்கொள்வது நல்லது.
  2.  உடற்பயிற்சி மேற்கொள்வது மிகவும் நல்லது. தூங்குவதற்கு முன் தியானம் செய்வதும் நல்லது. 

மீண்டும் சந்திப்போம் 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *